மூன்று காதல் கவிதைகள்

அந்தோன் சேகவ் (நம்ம ஆன்டன் செக்கோவ் அல்லது செக்காவ்தான்) எழுதிய ‘மூன்று ஆண்டுக’ளையும் துர்கேனிவ் (டர்ஜெனிவ்) படைத்த ‘மூன்று காதல் கதைக’ளையும் வளர் இளம் பருவத்தில் படித்துக் கற்பனையில் ருஷ்யப் பனியில் நனைந்தவன் நான்.

இரண்டு படைப்புகளுக்கும் எனது ட்ரிப்யூட்டாக இம்மூன்று காதற்கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன். சிலதுக்கு தபூ சங்கர்தான் இன்ஸ்பிரேசன் எனினும் அவர்தம் பெயரை இவை களங்கப்படுத்தா (இவற்றில் நாலை on the fly-ஆக வேர்ட்பிரஸில் இயற்றினேன்).

1

திருமணம் ஆனபிறகு
உனக்கு என் ஞாபகம் வருமா
எனக் கேட்கிறாய்.
நான் உன்னையே
திருமணம் செய்துகொண்டுவிட்டால்?

2

அழகான பெண்களைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது.
உன்னைப் பார்க்கும்போது
அழகான பெண்களின் ஞாபகம் வருகிறது.

3

வாழ்க்கையில்
ஒரு புத்தகமாவது
எழுதிவிடவேண்டும்
உன்னைப் பற்றி.

* * *

மூன்று கவிதைகள் என்று சொன்னதாக ஞாபகம்…

1

தொலைவினால்
ஆனது
நம் பிரிவு.

2

நான்
இல்லாமல்
வாழக் கற்றுக்கொள்.

3

நேற்று நீ என்னுதட்டில் பதித்த காயம்
கண்ணாடியில் தனைக் கண்டு சிவக்கிறது.

* * *

நான் சொன்ன மூன்று கவிதைகள் இதோ:

1

என்னென்னவோ
சொல்கிறதுன்1 பார்வை.
அட வேண்டாமடி2,
வாயைத் திற
கேட்கிறேன் உன் குரலையாவது3.

2

எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.

3

நான் மட்டும் இல்லையென்றால்
எதைப் பற்றிக் கவிதை எழுதுவாய் என்கிறாய்.
யாரைப் பற்றி என்று கேள்.

* * *

இவ்வளவு ரொமான்ஸாக எழுதிவிட்டு கம்பெனியாக ஒரு ரொமான்டிக் படத்தைப் போடாமல் இருந்தால் எப்படி? நாளைக்கு ஒரு தொகுப்பு கொண்டுவந்தால் கருப்பு-வெள்ளையில் போடலாம்.

காதல்

உதவிக் குறிப்புகள்:

1. ‘கிறது’வுக்கு அடுத்தாற்போல் ‘உன்’ வந்தால் பரம விசேஷம். ‘கிறதுன்’ என்று இணைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம் பாருங்கள்!

2. காதல் கவிதைகளில் ‘அடி’ எனப்படும் பெண்பாற் பின்னொட்டு வந்தாலும் ஊர்பட்ட விசேஷம்தான்.

3. எதையும் முதலிலேயே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது. அதனால்தான் சில கவிஞர்கள்* கவிதையின் முதல் சொல்லையோ சொற்றொடரையோ அடுத்த சில வரிகளுக்கு ஒளித்து வைத்துக்கொண்டு கடைசி வரியாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். சில சமயங்களில் இதன் எஃபெக்டுக்குத் தன்னிகரில்லை. தொல்காப்பியத்தை எழுதிய நாஸ்ட்ரடமஸ் நம் காலகட்டத்தை இப்படி முன்கூறியிருக்கிறார்: “முதற்சொல்லினைக் கடையிற்சேர்த்துக் கவிதையாக்குங்காலமாம் ஒன்றுமிருபதூஉம்.” (21-ஐ one and twenty என எழுதுவது மேற்கத்திய வழக்கமாகும். அவர் சொல்வது இருபத்தோராம் நூற்றாண்டை.)

* கவிஞர்கள் என்பது பெண் கவிஞர்களையும் குறிக்கும். அவர்களும் மனுச பாசையில்தான் எழுதுவதால்.

3a. மேற்சொன்ன உத்தியை முழுக் கவிதைக்கும் செயல்படுத்தி எழுதப்பட்ட எனது வேறொரு கவிதை:

பூகம்பம்

‘என்ன கறை சட்டையில்?’ என்றார்.
‘வந்ததல்லவா மதியம் லேசாக நில நடுக்கம்,
கொஞ்சம் சட்டையில் சிந்திவிட்டது
அந்த அதிர்ச்சியில் கையில் இருந்த டீ’ என்றேன்.
இப்போதும் வைத்திருக்கிறேன் அந்தச் சட்டையை
தோய்க்காமலே.

4. காதல் கவிதைகள் நிகழ்காலத்தில் (present tense) இருக்க வேண்டும்.

5. நபர் 1, நபர் இரண்டை விளித்துப் பேசுவதாக இருக்க வேண்டும். Tense இல்லாமல் எழுதுவது என்றால் கட்டளைத் தொனியில் (imperative) அமைந்திருக்க வேண்டும். இந்தச் சூழலில் ‘அடி’ உத்தியைக் கையாளலாம்.

6. மேலும் பல விதிமுறைகளை இப்பதிவில் அடிக்குறிப்பில்லாத கவிதைகளைப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

7. பயிற்சிக்கு: “என்பதால்தானோ என்னவோ”வைப் பயன்படுத்தி ஐந்து வரிக்கு மிகாமல் ஒரு கவிதை எழுதுக.

9 thoughts on “மூன்று காதல் கவிதைகள்

 1. செய்யுள் நடையி்ல் ஒரு காதல் கவிதை எழுதத் தெரியுமாங்களா உங்களுக்கு?

 2. தெரியு…மா-வா? தெரியாது. இஸ்கோல்ல படிச்சப்ப அறுசீர்க் கழிநெடிலடில சாதா தமிழ்ல எழுதுவேன். இப்ப வாய்ப்பாடெல்லாம் மறந்து போச்சு. நீங்க எழுதுவீங்கன்னு தெரியும்!

 3. neengal kavithai ezhuthuvathu eppadi endru oru puthakam podalam. elithaaga panam sambhathika oru vazhi. koodave kaloorigalil kavithai pattarai nadathinal viyabaram piyithu kondu pogum

 4. தெரிந்தால் நிச்சயம் புத்தகம் போடலாம். தெரியாவிட்டால் இப்படி அன்ஆர்கனைஸ்டு பட்டியல்களைத் தரலாம். இந்தப் பதிவில் என் கவிதைகள்தான் மெயின். கமென்ட்ஸ் எல்லாம் கொசுறு.

 5. Pingback: குரூரமான நகைச்சுவை « மைய நீரோட்டம்

 6. //பயிற்சிக்கு: “என்பதால்தானோ என்னவோ”வைப் பயன்படுத்தி ஐந்து வரிக்கு மிகாமல் ஒரு கவிதை எழுதுக. //

  எல்லோரும் வந்து கலக்க வேண்டும்
  என்பதனால் தானோ என்னவோ
  இப்படி பெயர் வைத்திருக்கிறாய்
  மைய நீரோட்டமே! :-))

 7. Pingback: கவிதை உத்தி நெ. 1 « மைய நீரோட்டம்

 8. Pingback: புதுக்கவிதையின் வீச்சும் வலிமையும் : மைய நீரோட்டம்

Comments are closed.