பொருள் கோளாறுகள்

குமுதத்தின் ‘வேட்டையாடு விளையாடு’ விமர்சனத்தில் ஒரு வாக்கியம்:

[ஜோதிகா] கண்களை அகல விரித்து குழந்தையாய் பார்க்கும்போது, சூர்யா ஏன் காதலில் விழுந்தார் என்பது தெரிகிறது.

ஒரு சினிமாப் பாட்டில் கூட “காதலில் விழுந்தேன்” என்று கேட்டிருக்கிறேன். காதலில் விழுவது இப்போது ஃபேஷன் ஆகிக்கொண்டு வருகிறது. இது falling in love என்ற சொற்றொடரின் மோசமான மொழிபெயர்ப்பு உல்டா இல்லை?

காதல் வசப்படுவது சுலபமாக இருக்கும்போது இவர்கள் ஏன் அதில் விழுந்து தொலைக்கிறார்கள்? பாட்டு என்றால் கூட ட்யூனுக்காகப் பண்ணுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். பத்திரிகைக்காரர்களுக்கு என்ன வந்தது?

சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு “வேட்டையாடி விளையாடியிருக்கிறார்கள்” என்று தலைப்பையே திரும்பச் சொல்லும் மிகப் பழைய இதழியல் எழுத்து உத்தியை ஒவ்வொரு முறையும் தவறாமல் பயன்படுத்த மட்டும் தெரிகிறது.

* * *

பத்திரிகைகளையும் மோசமான கவிதைகளை உற்பத்தி செய்பவர்களையும் பொறுத்த வரை, கண்களை அகல விரித்தல் பெண் அழகின் அதிமுக்கிய குணாம்சங்களில் ஒன்று.

* * *

நேற்று வந்த ‘தினமணி’யில் முதல் பக்கத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கானோருக்கு சிக்குன் குன்யா என்று ஒரு கட்டுரை. அதிலிருந்து –

கொசு உற்பத்தியைத் தடுக்கவும், சிக்குன் குனியா நோய் பரவாமல் தடுக்கவும் இதுவரை சுகாதாரத் துறையினர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

குறிப்பிடத்தக்கது என்ற சொற்றொடரை நல்ல விதமான பொருளில்தான் பயன்படுத்துவார்கள். எ.கா.: குறிப்பிடத்தக்க முயற்சி, …முன்பே இந்த விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

ஆனால் தினமணிக்காரர்கள், நோயைத் தடுக்க சுகாதாரத் துறை முயற்சி எடுக்காமல் விட்டதற்குப் பாராட்டுவது போல் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2 thoughts on “பொருள் கோளாறுகள்

  1. Nanna sonnel satanwal! “engirargal arasiyal nibunargal”, “engirargal arasiyal nokkargal” ponra sotrodargalaiyum idhil serthu kollalam.

  2. என் ஹிட்லிஸ்ட்டில் உச்சியில் இருப்பது ‘ஆகும்’ என்று முடிக்கும் புராதன வழக்கம். சில சந்தர்ப்பங்களில் அது ரொம்ப வசதியான வார்த்தை. கொஞ்சம் ஃபார்மல் தொனியைக் கொண்டு வரவும் அது பயன்படுகிறது. ஆனால் இப்போது ‘ஆகும்’-ஐத் தேவையில்லாமல்தான் பயன்படுத்துகிறார்கள்.

Comments are closed.