நூல் நயம்: சூ-மந்திரகாளி!

காமிக்ஸ் எல்லாம் குழந்தைகளுக்கு என்று நினைக்கும் அஞ்ஞானிகள் லயன் காமிக்ஸின் இந்த மாத வெளியீடான ‘சூ-மந்திரகாளி’யைப் படிக்க வேண்டும்.

lukewrapper.jpgஇந்த முழுநீள நகைச்சுவைப் படக் கதையைக் குழந்தைகளும் ரசிக்கலாம். ஆனால் இதன் நுணுக்கமான நகைச்சுவையில் முக்கால்வாசி அவர்களுக்குப் பிடிபடாமல் போகும். நான் ஒன்பதாவது படிக்கும்போது ‘பயங்கரப் பொடியன்’ நல்ல நகைச்சுவைக் கதையாகத்தான் இருந்தது. போன வருடம் படித்தபோதுதான் லக்கி லூக் (Lucky Luke) கதாபாத்திரத்தையும் அவனுடன் வழக்கமாக வரும் மற்றவர்களையும் உருவாக்கியவர்கள் ஜீனியஸாகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்தது.

அவர்கள் ஜீனியஸ்கள்தான். பெல்ஜியக் கலைஞர் மோரிஸ்தான் (Morris) லக்கி லூக்கின் ‘அப்பா’. Asterix காமிக்ஸை உருவாக்கிய பிரெஞ்சு எழுத்தாளர் ரெனே கோஸ்சின்னியும் சில கதைகளுக்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார்.

ஒரு நல்ல நகைச்சுவைக் கதைக்குரிய எல்லா அம்சங்களும் லக்கி லூக் கதைகளில் இருக்கின்றன. லக்கி லூக் ‘தன் நிழலை விட வேகமாகச் சுடும்’ திறமையுள்ள ஒரு கௌபாய். வாயில் தம் புகைய, எதற்கும் அலட்டிக்கொள்ளாத காமெடி க்ளின்ட் ஈஸ்ட்வுட் அவர். கிரிமினல்களைப் பிடித்துக் கொடுப்பது லக்கி லூக்கின் வாடிக்கை.

அவருடைய குதிரை ஜாலி ஜம்ப்பர் அடிக்கடி அவ்வப்போது எழும் சூழ்நிலைகளைப் பற்றி நச்சென்று கருத்துகள் உதிர்க்கும். லக்கி லூக்கைப் போல எல்லா சந்தர்ப்பத்திலும் கூல்.

மறக்கவே முடியாத இன்னொரு செட், டால்டன் சகோதரர்கள் நால்வர். நான்கு பேருக்கும் ஒரே தோற்றம் இருந்தாலும் வெவ்வேறு உயரத்தில் இருப்பார்கள். அவர்களில் மிகக் குள்ளமான சகோதரன் சரியான கில்லாடி. மிக உயரமான சகோதரன் அவனுக்கு நேரெதிர். நால்வரில் இந்த இருவருக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

‘சூ-மந்திரகாளி’யில் லக்கி லூக் டால்டன் சகோதரர்களை ஒரு மாஜிக் நிபுணரின் உதவியுடன் பிடிக்கிறார். எதையும் திருடாமல் இருக்க முடியாத மாஜிக் நிபுணர் முதலில் அவர்களின் கூட்டாளியாக இருக்கிறார். ஆனால் அவர் கேரக்டருக்கு லக்கி லூக்தான் ஒத்துவர, லக்கிக்கு அவர் பார்ட்னர் ஆகிறார். ஹீரோவானவர் டால்டன் சகோதரர்களைப் பிடிப்பதற்குள் மாஜிக் பார்ட்டி ஹீரோவைப் பல சிக்கல்களில் சிக்க வைத்துவிட்டு ரசிக்கிறார்.

பல துப்பாக்கிச் சண்டைகள், செவ்விந்தியர்களுடன் மோதல்கள், சேஸ்கள் என்று பல விறுவிறுப்பான அத்தியாயங்களைத் தாண்டி லக்கி லூக் எப்படி ஐந்து பேரையும் ஒரு வழி பண்ணிவிட்டு கதையின் கடைசி படப் பெட்டியில் “தனிமையே என் துணைவன், தனிமையே என் வாழ்க்கை” என்று தன் ஸ்டைலில் பாடுகிறார் என்பதே கதை. ஆஸ்டரிக்ஸில் கடைசியில் Cacofonix-ஐ (மோசமான பாடகன் கேரக்டர்) கட்டிப் போட்டுவிட்டு வெற்றியைக் கொண்டாடுவது போல, இந்தப் பாட்டு லக்கி லூக் கதைகளின் வழக்கமான க்ளைமாக்ஸ்.

சூ-மந்திரகாளியைப் படிக்காதவர்களுக்கு சஸ்பென்ஸைக் கெடுத்துவிடக் கூடாது. ஆனால் ஒரு விஷயம்: லக்கி லூக் ‘பயங்கரப் பொடியன்’ கதையில் எதிரியை மண் கவ்வச் செய்ய என்ன டெக்னிக்கைக் கையாள்கிறாரோ அதே உத்தியைத்தான் இதிலும் பயன்படுத்துகிறார்.

நகைச்சுவையும் உள்ள சீரியஸ் கௌபாய் கதைகள் அடங்கிய டெக்ஸ் வில்லர் தொடரில் இருக்கும் அடிதடி, துப்பாக்கிச் சண்டைகள், டைனமைட் பயன்பாடு, செவ்விந்தியர்கள் என்று அத்தனையும் சூ-மந்திரகாளியில் இருக்கின்றன.

வாய்விட்டு சிரிக்க வைக்கும் விஷுவல் கற்பனைகளும் வசனங்களும் நிறைய இருக்கின்றன. மனித முக அமைப்புகளையும் முக பாவங்களையும் அநியாயத்திற்குக் கிண்டலடித்து, புத்தகத்தை மூடும் வரை புன்னகையுடன் இருக்கச் செய்கிறார்கள் ஓவியர்கள். முழுக் கதையும் தொய்வில்லாமல் போகிறது.

லயன் காமிக்ஸ்காரர்களின் மொழிபெயர்ப்புத் திறமையையும் கற்பனை வளத்தையும் சொல்ல வேண்டும். இவை லக்கி லூக், டெக்ஸ் வில்லர் போன்ற கதைகளில் அருமையாக வெளிப்படுகின்றன (ஸ்பைடர் கதைகளில் மோசமாக இருக்கும்).

லயன்/முத்து காமிக்ஸின் மற்ற கதைகளைக் குறுகிய காலகட்டத்தில் ஒரு முறை படிக்கலாம். லக்கி லூக் கதைகளை தொடர்ந்து பல முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ரசிக்கலாம். நாம் தவறவிட்ட ஒரு சின்ன, நுணுக்கமான நகைச்சுவையை அடுத்த வாசிப்பில் கவனிக்கலாம்.

காமிக்ஸைப் பற்றி இவ்வளவு சிலாகிக்க வேண்டுமா என்றெண்ணுபவர்கள் முதலில் லக்கி லூக்கை சந்திக்க வேண்டும்.

புதியவர்களுக்கு முதல் இரண்டு பக்கங்களின் ஸ்கேன் கீழே. க்ளிக் செய்தால் முழுப் படம் காணக் கிடைக்கும்.

luckylukescant.jpg

காமிக்ஸின் வரலாற்றுப் பின்னணி பற்றி ஒரு பதிவு

4 thoughts on “நூல் நயம்: சூ-மந்திரகாளி!

  1. ஓ, இப்பத்தான் படிச்சீங்களா? நான் இதப் போட்டு ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் டாங்சுங்க.

  2. Pingback: மூன்று விஷயங்கள் « மைய நீரோட்டம்

Comments are closed.