என்று காண்போம் தமிழ் spam-ஐ?

குப்பைதகவல் தொழில்நுட்பத்தில் மொழி தொடர்பான எல்லாமே பிற வெளிநாட்டு மொழிகளுக்கு வந்து ரொம்ப காலத்திற்குப் பிறகுதான் தமிழுக்கு வருகின்றன. இதன் காரணிகளை ஆராயும் துறைத் தேர்ச்சி (domain expertise) எனக்கில்லை. ஆனால் ஒன்று மட்டும் கூறிக்கொள்கிறேன். மின்னஞ்சலிலும் வலைப்பதிவுகளிலும் நாம் பார்க்கும் விளம்பரக் குப்பை (spam) தமிழுக்கு வந்தால் அதை நமக்கு மிக முக்கியமான ஒரு வளர்ச்சிக் கட்டம் என்று சொல்லலாம்.

ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் விளம்பரக் குப்பைகள் வருவது ஐ.ஆர்.சி.யும் மின்குழுக்களும் உச்சத்தில் இருந்தபோதே தொடங்கிவிட்டது.

நான் எம்.ஐ.ஆர்.சி. என்ற அரட்டை மென்பொருள் மூலம் ஐ.ஆர்.சி.யில் சாட் செய்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே – அதாவது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு – இதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அரட்டை அறையில் எல்லோரும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்போம். திடீரென்று ஒருவர் ஒரு சேதி அனுப்புவார்: “நீங்க சொல்றத நான் ஏத்துக்கிட்டுதான் ஆகணும். www.sexoloco.com-க்கு வாங்க.”

இதே மாதிரி உள்ளடக்கம் கொண்ட விளம்பரக் குப்பைகள் எக்கச்சக்கமான வலைப்பதிவுகளில் தென்படுகின்றன. எ.கா.:

“எனக்கென்னமோ கொஞ்ச நாளா மனசே சரியில்லை. எந்த வேலையும் ஓட மாட்டேன் என்கிறது…” என்று ஆறு வரிகளுக்கு வளவளக்கும் ஒரு கமென்ட். போட்டவரின் வலை முகவரியைப் பார்த்தால் வயாக்ரா, ஃபென்டர்மைன், சியாலிஸ் முதலானவற்றை அடிமாட்டு விலையில் தருவதாக உறுதியளிக்கும் வலையகம் ஒன்றின் முகவரியாக இருக்கும்.

இன்னொரு spam comment: “எனக்கு அவசரமாக உன் உதவி தேவை. தயவு செய்து உதவு. இந்த வெப்சைட் எல்லாம் உனக்குப் புடிச்சிருக்கா?” இதற்குக் கீழே மலிவு விலை மருந்து சைட் பட்டியல் ஒன்று.

இது மாதிரியெல்லாம் தமிழில் வந்தால் மகா வேடிக்கையாக இருக்கும்.

தமிழில் ஸ்பாம் பண்ணுவதற்கு இங்கே முதலில் மார்க்கெட் நிலவரங்கள் ஒத்துழைக்க வேண்டும். இங்கே முதலில் ஸ்பாமுக்கு என்ன தயாரிப்புகள் இருக்கின்றன? சிட்டுக்குருவி வகை லேகியங்கள்? எஸ்கார்ட்கள்? ஸ்பாம் செய்வதற்கு முக்கியத் தகுதி, இணையத்தில் மட்டும் யாவாரம் செய்துகொண்டிருக்க வேண்டும். ஆஃப்லைன் பிசினஸ் என்றாலும் ஒற்றை அறை அலுவலகம் கொண்ட கம்பெனியாக இருக்க வேண்டும்…

இன்னும் ஒன்றே ஒன்று கூறிக்கொள்கிறேன். என் வலைப்பதிவுக்குத் தமிழ் spam வந்தால் நான் நிச்சயம் அதை அனுமதிப்பேன். கொஞ்ச நாளைக்காவது.

2 thoughts on “என்று காண்போம் தமிழ் spam-ஐ?

  1. இந்தப் பதிவு மட்டும்தானா? நீங்கள் முழு வலைப்பதிவையும் பார்க்கவில்லை போலிருக்கிறது.

    நல்ல புனைபெயர். உங்கள் விசைப்பலகையில் உயிரெழுத்துக்கள் மிஸ்ஸிங்?

Comments are closed.