மொழிப் பிரச்சினை

“காலணிகளை வெளியே விடவும்”, ” கவனிக்கவும்” என்றெல்லாம் எழுதுகிறார்களே, இதில் “உம்” எங்கிருந்து வந்தது?

ஒன்று, செய்யுங்கள், கவனியுங்கள், எழுதுங்கள் என்று நேரடியாக எழுத வேண்டும். அல்லது செய்க, கவனிக்க, எழுதுக என்று எழுத வேண்டும், கொஞ்சம் பழைய வாடை அடித்தால் பரவாயில்லை என்கிற பட்சத்தில். இரண்டுமில்லாமல் ‘உம்’ போட்டு எழுதுவதில் ஏதோ சீரியஸ் பிழை இருக்கிறது. வார்த்தையிலிருந்து தனியாகப் பிரித்தால் பொருள் வராத ‘உம்’ எதற்கு?

“ங்கள்” என்ற பின்னொட்டில் ஒரு pattern இருக்கிறது…

பாருங்கள் = பார் + உ + ங்கள்
செய்யுங்கள் = செய் + உ + ங்கள்
வாருங்கள் = வா + ர் + உ + ங்கள்
சிரியுங்கள் = சிரி + உ + ங்கள்

“உம்”-இல் மூல வினைச் சொல் பிரிக்க முடியாமல் புதைந்திருக்கிறது…

பார்க்கவும் = பார்க்க + உம்
செய்யவும் = செய்ய + உம்
வரவும் = வர + உம்
சிரிக்கவும் = சிரிக்க + உம்

உம்மைத் தொகையில் வரும் ‘உம்’மை ஏற்கலாம், எதிர்காலத்தைக் குறிக்கும் ‘உம்’மை (”சுடும்”) ஏற்கலாம். இந்த உம் என்னாத்துக்கு?

‘தெரிவியுங்கள்’ என்பதில் இல்லாத ஒரு பணிவு ‘தெரிவிக்கவும்’ என்பதில் இருப்பது போல் தோன்றலாம். தயவு செய்து என்ற சொற்றொடர் எதற்கு இருக்கிறதாம். ஷார்ட்டாக இருக்கிறது என்பதற்காக இல்லாததையும் பொல்லாததையும் எழுதலாமா?

‘உம்’மின் மூலத்தை யாராவது கண்டுபிடித்தால் நன்றாயிருக்கும். அது அனேகமாக அந்தக் காலத்துப் பாட்டிகள் எழுதிய கடுதாசிகளிலிருந்து வந்திருக்கும். இலக்கணப் புலிகள் தயைகூர்ந்தென் ஐயத்தைத் தெளிவித்து உதவவும் உதவுங்கள்!

யார் இந்த ப்ளூட்டோ?

அண்மையில் பதவியிறக்கம் செய்யப்பட்ட ப்ளூட்டோ கிரகத்தைப் பற்றி எனக்கு மட்டுமே தெரிந்த சில தகவல்களை இந்த வலைப்பதிவின் 50,000 வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ப்ளூட்டோ (புளூட்டோ) கிரகம் இரண்டாம் உலகப் போருக்கு முன் வெள்ளைக்கார விஞ்ஞானி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மின்சக்தி, தொலைபேசி, கணிப்பொறி ஆகியவற்றுக்குப் பின் மிக முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று என ப்ளூட்டோ கருதப்பட்டது. நாட் எனி மோர். ப்ளூட்டோவின் பரப்பளவு சுண்டைக்காயை மிக மிக அருகில் வைத்துப் பார்த்தால் தெரியும் பரப்பளவை விடச் சிறியது என்று வேறு சில வெள்ளைக்கார விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். அதன் விளைவே அதற்குக் கிட்டிய குள்ளப் பட்டம்.

pulootto.gif

பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவ ஞானி ப்ளூட்டோவின் பெயரே இக்கிரகத்திற்கு சூட்டப்பட்டது. அஞ்ஞானிக்கு இருந்தது போன்று ப்ளூட்டோ கிரகத்திற்கும் பல்வேறு வகையான வாயுக்களின் வெளியீட்டினால் ஏற்பட்ட வால் போன்ற தாடி இருந்தமையால் ப்ளூட்டோவிற்கு ப்ளூட்டோவின் பெயர் சூட்டப்பட்டது.

கிரேக்கத் தத்துவ ஞானிகளுக்கும் விண்வெளியியலுக்கும் உள்ள உறவு கொஞ்சம் போல் தொன்மையானது. ப்ளூட்டோவின் ஆசிரியரான அரிஸ் டட்டிலின் (Aris Tuttle) பெயர் சுவிப்ட் டட்டில் (Swift-Tuttle) எனும் தூமகேதுவிற்கு வைக்கப்பட்டது. அதற்குப் பின் அரிஸ் டட்டிலை “கிரேக்கப் பெரியவர்” என்று அழைக்கின்றனர்.

ப்ளூட்டோ ஒரு குள்ளக் கிரகம் என்று கண்டுபிடித்த மைக் பிரவுன் என்ற விஞ்ஞானியை காவல் துறை விசாரணை செய்து வருகிறது.

18 மாதக் குழந்தையுடன் பேசக் கூடிய விஷயங்கள்

‘டி.வி.யை அணைத்துவிட்டு உங்கள் மகனுடன் நிறைய பேசுங்கள், அவன் பேச்சுத் திறன் நன்றாக வளரும்’ என்று வாரிசின் டாக்டர் சொல்லியிருக்கிறார். அதனால் அவன் மாடு சத்தம், ஆட்டோ சத்தம், கோவில் சத்தம் எல்லாம் படு உன்னிப்பாகக் கேட்கும்போதும் என் அர்த்தமுள்ள சத்தத்தை அவன் காதில் போடுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறேன்.

குழந்தைகளுடன் பேசுவது என்று முடிவெடுத்துவிட்டால் விஷயத்திற்குப் பஞ்சமே இல்லை. இன்னதுதான் பேச வேண்டும் என்றில்லை. நம் நெருங்கிய நண்பர்கள் கூட ஜீரணித்துக்கொள்ள முடியாத கருத்துக்களைக் குழந்தைகளிடம் சொல்லலாம். அவர்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை.

குழந்தைகளுடன் பேச லாஜிக் தேவையில்லை. சமூகம் நம் மீது சுமத்தும் மொழி சார்ந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கும் நிர்ப்பந்தம் குழந்தைகளுடன் பேசும்போது நமக்கில்லை. ஜூனியருடன் டாட்டா போகும்போது இலக்கணம், உச்சரிப்பு, கோர்வையான பேச்சு, இதற்கெல்லாம் கூட டாட்டாதான்.

பெரும்பாலும் ஆட்டோ சத்தத்திற்குக் கிடைக்கிற கவனிப்பு என் சத்தத்திற்குக் கிடைப்பதில்லை. இருப்பினும் டாக்டர் பேச்சு கருதிப் பையனுடன் பொதுவாக நான் பேசும் விடயங்கள் பின்வருமாறு:

“அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா பாத்தியா? அப்பாவ கண்டுக்காம போறா பாரு, திமிர் புடிச்சவ.”

“அந்த அங்க்கிள் தொப்பை பானை மாதிரி இருக்கு பாத்தியா? அங்க்கிள், அங்க்கிள், நீங்க ஆனை மாமாவா பானை மாமாவான்னு கேக்கறியா?”

“பாரு, பைத்தியக்காரக் கோயில்ல மைக் போட்டு கத்தறாங்க. சரியான லூசு கோயில், இல்ல? [வெளியே வரும் முதிய பக்திமான் ஒருவரைக் காட்டி] இந்தப் பையன் எந்த ஸ்கூல் தெரியுமா?”

“நேக்கு நன்னா வேணும்…!”

கதை எழுதுபவர்களை எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிற விஷயங்களில் ஒன்று கதைக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பது. ஆனால் சில பேருக்கு அது எந்த மூளைக் கசக்கலும் இல்லாமல் கைவந்துவிடுகிறது.

இந்த வார குமுதம் சிநேகிதியை சோம்பேறித்தனமாகப் புரட்டிக்கொண்டிருந்தபோது 60-ஆம் பக்கத்தில் ஒரு நன்முத்து கண்ணில் பட்டது. சிறுகதை இப்படி ஆரம்பிக்கிறது -

ஸ்வரி தன்னெதிரே இருந்த பெயர்ப் பலகையை பிரமிப்பாகப் பார்த்தாள்.

“ஈஸ்வரி ஐ.ஏ.எஸ்’

உச்சரிக்கும் போதே தித்தித்தது.

ஈஸ்வரி கண்களை மூடினாள்…

நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன…

அடுத்து ஃப்ளாஷ்பேக். எவ்வளவு ஈஸி! (அந்த இரட்டை மேற்கோள் பிழை அச்சிலேயே இருக்கிறது) சிறுகதைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு நம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் எல்லா கதைகளிலும் இந்த லாகவத்தைப் பார்க்கலாம். கதை எழுதுவதில் இவர்களுக்கு ஸ்டார்ட்டிங் பிராப்ளமே வர வாய்ப்பில்லை.
தொடக்கத்தையும் நடுப் பகுதியையும் முடிவையும் எழுதப் பயன்படும் முக்கியமான ஒரு கருவி முப்புள்ளி (…). இது மல்ட்டி பர்ப்பஸ் நிறுத்தக் குறி. கமா, முற்றுப் புள்ளி, அரைப் புள்ளி, ஆச்சரியக் குறி - எல்லாவற்றுக்கும் மாற்று இந்த முப்புள்ளி. எ.கா.:

“கௌரி வீட்டாரின் தித்திப்பான பேச்சும்… அந்த பிரமாண்ட வீடும்… சுந்தரிமாமியின் ஆசையை அதிகரிக்கச் செய்தது.”

“தன்னுடைய சொந்த மாவட்டத்திற்கே… கலெக்டராய் பொறுப்பேற்றிருக்கிறாள்.”

“மாமி… ஈஸ்வரிதான் சொன்னா…!”

மிக அதிக எஃபெக்ட் கிடைக்க வேண்டும் என்றால் ஆச்சரியக் குறிக்கு முன் முப்புள்ளி போட வேண்டும்.

“காதலனின் பூஞ்சிரிப்பிற்காக எதையும் செய்யலாமே…!”

கதை என்ன கருமாந்தரமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது இப்படி முடிகிறது:

“அழாதேள் மாமி…! உங்களுக்குத்தான் நானிருக்கேனே…! எங்காத்துக்கே வந்துடுங்கோ… நா… உங்களை ராணியாட்டம் வெச்சுக்கறேன்…!” என்றாள் ஈஸ்வரி கம்பீரமாய்.

சாட்சாத் அந்த அம்பாளே ஈஸ்வரி வடிவத்தில் தன்னெதிரே நின்று அபயம் தருவது போல இருந்தது சுந்தரிக்கு. கண்களில் கண்ணீர் வழிந்தோடி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்டது. தன்னையும் மீறி கைகூப்பினாள்.

கண்களில் கண்ணீர் வழியாமல் Heineken பியரா வழியும்? இந்தச் சிறுகதையின் தலைப்பு: “எப்போதும் அதன் பெயர் தென்றல் அல்ல…”
இந்தப் புள்ளி நோய் பல பயங்கரக் கவிஞர்களையும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு மூன்று வரிக்கும் கடைசி வார்த்தைக்கு சோத்துக் கை பக்கம் மூன்று புள்ளிகளை வைத்துவிட்டால் கவித்துவம் ஏறிவிடுவதாக ஒரு நம்பிக்கை. சில பேர் வகை தொகையில்லாமல் நாலு புள்ளி, ஆறு புள்ளியெல்லாம் கூட வைக்கிறார்கள்.
பின்வரும் வகை கவிதைகளில் இவற்றுக்கு மேஜர் ரோல் உண்டு:

“ஓ…” கவிதைகள் - இவற்றில் “ஓ…” என்ற சொற்றொடர்தான் ஹீரோ.

“என்பதால்தானோ என்னவோ” கவிதைகள் - என்பதால்தானோ என்னவோவுக்கு அப்புறம் பஞ்ச் லைன் டெலிவர் செய்யப்படும்.

“பெண்ணே…/…!/!” கவிதைகள் - சினிமா பாட்டுக்கு மானே, தேனே, சகியே, பூவே, அழகே, இத்யாதி மாதிரி கவிதைக்குப் “பெண்ணே!”.
எழுத்தாணியால் புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும் என்ற பயத்தில் புள்ளி வைக்காமல் விட்ட காலத்தில் இந்தப் புள்ளி ராஜாக்கள் பிறந்திருந்தால் ரொம்ப அவஸ்தைப்பட்டிருப்பார்கள்.

« Previous PageNext Page »