மொழிப் பிரச்சினை

“காலணிகளை வெளியே விடவும்”, ” கவனிக்கவும்” என்றெல்லாம் எழுதுகிறார்களே, இதில் “உம்” எங்கிருந்து வந்தது?

ஒன்று, செய்யுங்கள், கவனியுங்கள், எழுதுங்கள் என்று நேரடியாக எழுத வேண்டும். அல்லது செய்க, கவனிக்க, எழுதுக என்று எழுத வேண்டும், கொஞ்சம் பழைய வாடை அடித்தால் பரவாயில்லை என்கிற பட்சத்தில். இரண்டுமில்லாமல் ‘உம்’ போட்டு எழுதுவதில் ஏதோ சீரியஸ் பிழை இருக்கிறது. வார்த்தையிலிருந்து தனியாகப் பிரித்தால் பொருள் வராத ‘உம்’ எதற்கு?

“ங்கள்” என்ற பின்னொட்டில் ஒரு pattern இருக்கிறது…

பாருங்கள் = பார் + உ + ங்கள்
செய்யுங்கள் = செய் + உ + ங்கள்
வாருங்கள் = வா + ர் + உ + ங்கள்
சிரியுங்கள் = சிரி + உ + ங்கள்

“உம்”-இல் மூல வினைச் சொல் பிரிக்க முடியாமல் புதைந்திருக்கிறது…

பார்க்கவும் = பார்க்க + உம்
செய்யவும் = செய்ய + உம்
வரவும் = வர + உம்
சிரிக்கவும் = சிரிக்க + உம்

உம்மைத் தொகையில் வரும் ‘உம்’மை ஏற்கலாம், எதிர்காலத்தைக் குறிக்கும் ‘உம்’மை (“சுடும்”) ஏற்கலாம். இந்த உம் என்னாத்துக்கு?

‘தெரிவியுங்கள்’ என்பதில் இல்லாத ஒரு பணிவு ‘தெரிவிக்கவும்’ என்பதில் இருப்பது போல் தோன்றலாம். தயவு செய்து என்ற சொற்றொடர் எதற்கு இருக்கிறதாம். ஷார்ட்டாக இருக்கிறது என்பதற்காக இல்லாததையும் பொல்லாததையும் எழுதலாமா?

‘உம்’மின் மூலத்தை யாராவது கண்டுபிடித்தால் நன்றாயிருக்கும். அது அனேகமாக அந்தக் காலத்துப் பாட்டிகள் எழுதிய கடுதாசிகளிலிருந்து வந்திருக்கும். இலக்கணப் புலிகள் தயைகூர்ந்தென் ஐயத்தைத் தெளிவித்து உதவவும் உதவுங்கள்!

4 thoughts on “மொழிப் பிரச்சினை

 1. இந்த ‘உம்’ இல் உங்களுக்கு என்ன பிணக்கு என்று தெரியவில்லை, இருந்து விட்டு போகட்டுமே…

 2. மொழிப் பிரச்சினைகளும் ரியல் பிரச்சினைகள்தாம். நீங்கள் “உம்-உடன்” என்று எழுதாமல் “உம் இல்” என்று எழுதுவது (அவனுடன் சண்டை என்று சொல்வீர்களா அவனில் சண்டை என்பீர்களா?), “இருந்து”வையும் “விட்டு”வையும் தனித் தனியாக எழுதுவது, “தெரியவில்லை”க்குப் பிறகு அரைப் புள்ளிக்கு பதிலாக கமா போடுவது, “விட்டு”வுக்கு அப்புறம் ‘ப்’ போடாமல் விடுவது, இதையெல்லாம் பார்த்தால் கூடக் கண்ணில் ரத்தம் வருகிறது ஓய்! ஃபீல்டில் இருந்தால் புரிந்துகொள்வீர்கள்!

  (அப்பாடா, இனிதே துவங்கியதென் காலை!)

 3. ‘அவன்’ வேறு ‘உம்’ வேறு என்று தோன்றுகிறது.
  ‘உம்’ இல் என்று எழுதியது, ‘உம்’ மை பயன்படுத்துவ-‘தில்’ என்பதின் சுருக்கம்.

  ஒரு மொழி, இடத்திற்கு ஏற்றார்போல் வளைய வேண்டும், தேவையில்லா மரபுகளைக் கட்டிக் கொண்டு அலையத்தேவையில்லை என்பது என் கருத்து.

  ’இருந்து’-வையும் ‘விட்டு’- வையும் தனியாக பிரித்து எழுதினால், எழுத்தின் பொருள் பிழன்றுபோனதா என்ன?

 4. நீங்கள் சொல்வது சரிதான். தேவையில்லாத மரபுகளை அவசியம் கழற்றி விட வேண்டும்தான். ஆனால் அடிப்படைகளை தேவையில்லாதவை லிஸ்ட்டில் சேர்த்துவிட முடியாது. உதாரணமாக, ‘ஏற்றாற்போல்’ என்றால் எழுத்துப் பிழையில்லாமல் இருக்கும்!

  பேசும்போது எப்படி வேண்டுமானாலும் பேசலாம். எழுத்துத் தமிழுக்கென்று ஒரு ஒழுங்கு தேவை. உண்மையில் ஓர் ஒழுங்கு என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு நான் மரபுப் பிரியன் அல்ல(ன்).

  பதிவைப் பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி! உங்கள் வலைப்பதிவு ஏன் இன்னும் காலியாக இருக்கிறது?

Comments are closed.