18 மாதக் குழந்தையுடன் பேசக் கூடிய விஷயங்கள்

‘டி.வி.யை அணைத்துவிட்டு உங்கள் மகனுடன் நிறைய பேசுங்கள், அவன் பேச்சுத் திறன் நன்றாக வளரும்’ என்று வாரிசின் டாக்டர் சொல்லியிருக்கிறார். அதனால் அவன் மாடு சத்தம், ஆட்டோ சத்தம், கோவில் சத்தம் எல்லாம் படு உன்னிப்பாகக் கேட்கும்போதும் என் அர்த்தமுள்ள சத்தத்தை அவன் காதில் போடுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறேன்.

குழந்தைகளுடன் பேசுவது என்று முடிவெடுத்துவிட்டால் விஷயத்திற்குப் பஞ்சமே இல்லை. இன்னதுதான் பேச வேண்டும் என்றில்லை. நம் நெருங்கிய நண்பர்கள் கூட ஜீரணித்துக்கொள்ள முடியாத கருத்துக்களைக் குழந்தைகளிடம் சொல்லலாம். அவர்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை.

குழந்தைகளுடன் பேச லாஜிக் தேவையில்லை. சமூகம் நம் மீது சுமத்தும் மொழி சார்ந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கும் நிர்ப்பந்தம் குழந்தைகளுடன் பேசும்போது நமக்கில்லை. ஜூனியருடன் டாட்டா போகும்போது இலக்கணம், உச்சரிப்பு, கோர்வையான பேச்சு, இதற்கெல்லாம் கூட டாட்டாதான்.

பெரும்பாலும் ஆட்டோ சத்தத்திற்குக் கிடைக்கிற கவனிப்பு என் சத்தத்திற்குக் கிடைப்பதில்லை. இருப்பினும் டாக்டர் பேச்சு கருதிப் பையனுடன் பொதுவாக நான் பேசும் விடயங்கள் பின்வருமாறு:

“அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா பாத்தியா? அப்பாவ கண்டுக்காம போறா பாரு, திமிர் புடிச்சவ.”

“அந்த அங்க்கிள் தொப்பை பானை மாதிரி இருக்கு பாத்தியா? அங்க்கிள், அங்க்கிள், நீங்க ஆனை மாமாவா பானை மாமாவான்னு கேக்கறியா?”

“பாரு, பைத்தியக்காரக் கோயில்ல மைக் போட்டு கத்தறாங்க. சரியான லூசு கோயில், இல்ல? [வெளியே வரும் முதிய பக்திமான் ஒருவரைக் காட்டி] இந்தப் பையன் எந்த ஸ்கூல் தெரியுமா?”

3 thoughts on “18 மாதக் குழந்தையுடன் பேசக் கூடிய விஷயங்கள்

  1. உங்கள் மகன் உங்களிடம் அவற்றையெல்லாம் திருப்பி சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ஏனென்றால் குழந்தைகள் பேச்சு வந்தவுடன் கேட்டும் கேள்விகளுக்கு வரையறை என்பதே இல்லை. Also get prepared for that! Good luck!

  2. அஆங். பதில் தெரிந்தால் சொல்கிறேன், தெரியாவிட்டால் இருக்கிறது கூகிள், விக்கிபீடியா வகையறா. அவையும் பிரயோசனப்படவில்லையா? கிரியேட்டிவிட்டி துணை.

Comments are closed.