“நேக்கு நன்னா வேணும்…!”

கதை எழுதுபவர்களை எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிற விஷயங்களில் ஒன்று கதைக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பது. ஆனால் சில பேருக்கு அது எந்த மூளைக் கசக்கலும் இல்லாமல் கைவந்துவிடுகிறது.

இந்த வார குமுதம் சிநேகிதியை சோம்பேறித்தனமாகப் புரட்டிக்கொண்டிருந்தபோது 60-ஆம் பக்கத்தில் ஒரு நன்முத்து கண்ணில் பட்டது. சிறுகதை இப்படி ஆரம்பிக்கிறது –

ஸ்வரி தன்னெதிரே இருந்த பெயர்ப் பலகையை பிரமிப்பாகப் பார்த்தாள்.

“ஈஸ்வரி ஐ.ஏ.எஸ்’

உச்சரிக்கும் போதே தித்தித்தது.

ஈஸ்வரி கண்களை மூடினாள்…

நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன…

அடுத்து ஃப்ளாஷ்பேக். எவ்வளவு ஈஸி! (அந்த இரட்டை மேற்கோள் பிழை அச்சிலேயே இருக்கிறது) சிறுகதைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு நம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் எல்லா கதைகளிலும் இந்த லாகவத்தைப் பார்க்கலாம். கதை எழுதுவதில் இவர்களுக்கு ஸ்டார்ட்டிங் பிராப்ளமே வர வாய்ப்பில்லை.
தொடக்கத்தையும் நடுப் பகுதியையும் முடிவையும் எழுதப் பயன்படும் முக்கியமான ஒரு கருவி முப்புள்ளி (…). இது மல்ட்டி பர்ப்பஸ் நிறுத்தக் குறி. கமா, முற்றுப் புள்ளி, அரைப் புள்ளி, ஆச்சரியக் குறி – எல்லாவற்றுக்கும் மாற்று இந்த முப்புள்ளி. எ.கா.:

“கௌரி வீட்டாரின் தித்திப்பான பேச்சும்… அந்த பிரமாண்ட வீடும்… சுந்தரிமாமியின் ஆசையை அதிகரிக்கச் செய்தது.”

“தன்னுடைய சொந்த மாவட்டத்திற்கே… கலெக்டராய் பொறுப்பேற்றிருக்கிறாள்.”

“மாமி… ஈஸ்வரிதான் சொன்னா…!”

மிக அதிக எஃபெக்ட் கிடைக்க வேண்டும் என்றால் ஆச்சரியக் குறிக்கு முன் முப்புள்ளி போட வேண்டும்.

“காதலனின் பூஞ்சிரிப்பிற்காக எதையும் செய்யலாமே…!”

கதை என்ன கருமாந்தரமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது இப்படி முடிகிறது:

“அழாதேள் மாமி…! உங்களுக்குத்தான் நானிருக்கேனே…! எங்காத்துக்கே வந்துடுங்கோ… நா… உங்களை ராணியாட்டம் வெச்சுக்கறேன்…!” என்றாள் ஈஸ்வரி கம்பீரமாய்.

சாட்சாத் அந்த அம்பாளே ஈஸ்வரி வடிவத்தில் தன்னெதிரே நின்று அபயம் தருவது போல இருந்தது சுந்தரிக்கு. கண்களில் கண்ணீர் வழிந்தோடி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்டது. தன்னையும் மீறி கைகூப்பினாள்.

கண்களில் கண்ணீர் வழியாமல் Heineken பியரா வழியும்? இந்தச் சிறுகதையின் தலைப்பு: “எப்போதும் அதன் பெயர் தென்றல் அல்ல…”
இந்தப் புள்ளி நோய் பல பயங்கரக் கவிஞர்களையும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு மூன்று வரிக்கும் கடைசி வார்த்தைக்கு சோத்துக் கை பக்கம் மூன்று புள்ளிகளை வைத்துவிட்டால் கவித்துவம் ஏறிவிடுவதாக ஒரு நம்பிக்கை. சில பேர் வகை தொகையில்லாமல் நாலு புள்ளி, ஆறு புள்ளியெல்லாம் கூட வைக்கிறார்கள்.
பின்வரும் வகை கவிதைகளில் இவற்றுக்கு மேஜர் ரோல் உண்டு:

“ஓ…” கவிதைகள் – இவற்றில் “ஓ…” என்ற சொற்றொடர்தான் ஹீரோ.

“என்பதால்தானோ என்னவோ” கவிதைகள் – என்பதால்தானோ என்னவோவுக்கு அப்புறம் பஞ்ச் லைன் டெலிவர் செய்யப்படும்.

“பெண்ணே…/…!/!” கவிதைகள் – சினிமா பாட்டுக்கு மானே, தேனே, சகியே, பூவே, அழகே, இத்யாதி மாதிரி கவிதைக்குப் “பெண்ணே!”.
எழுத்தாணியால் புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும் என்ற பயத்தில் புள்ளி வைக்காமல் விட்ட காலத்தில் இந்தப் புள்ளி ராஜாக்கள் பிறந்திருந்தால் ரொம்ப அவஸ்தைப்பட்டிருப்பார்கள்.

7 thoughts on ““நேக்கு நன்னா வேணும்…!”

 1. அதே தொனியில் ஒரு பதில்:

  ஹைய்யோ…! கலக்கிட்டீங்க!

  (வேறு)

  பிளாக் சூப்பரா இருக்கு… (உபயம்: சன் டிவி திரைவிமர்சனத்தில் படம் பார்த்து வெளியே வருபவர்களின் சவுண்டுபைட்டுகள்).

 2. kalakitinga sir. romba nijam…..! good observation. ippa ellam kumudham anandha vikatan have lost their shine. enaku therinja sila friends jaggi vasudev article mattum padika andha book vangaranga.

 3. velai ethuvum seiyyama vettiya kumudham snegidhi, aval vikatan ellathaiyum ori varividaama ‘purata’ vendiyathu. appuram somberi thanamaa puratikittirukumbothunu munnuraiyoda athula vanthirukira vishayngalai kindal adikka vendiyathu! ithu enna vettiyaana pozhappu!
  aangalukkuthaan evlo mattamaana pathirikkaikal varuthu. naanga ethaiyaavathu padichitu ippadiyaa vetti comment adichikittu suthikitirukkom!! somberithanamnaa summa irukkavendiyathuthaane. yen snegidhiyai puratuvaanen! ungalukkellam vera velaiye illaiya?!!!

 4. செந்தில்: எங்க உங்க வலைப்பதிவ இன்னும் காணோம்?

  vijayc: ஒரு ரகசியம்: ஜக்கி வாசுதேவ் படிக்க உங்கள் நண்பர்கள் விகடனெல்லாம் படிக்கத் தேவையில்லை. அவரது லொக்கேஷனுக்குப் போய் அவரது வீடியோ சி.டி.களை வாங்கிப் பார்க்கச் சொல்லுங்கள். அவற்றில் இருப்பதைத்தான் பத்திரிகைகள் பார்ட் பார்ட்டாகப் போடுகின்றன. இது ஒரு பக்தர் எனக்களித்த தகவல்.

  vaidehi: உங்கள் கொந்தளிப்பின் காரணம் புரிகிறது. நான் ஆம்பிள்ளையாக இருந்துகொண்டு பெண்கள் பத்திரிகைகளைக் கிண்டல் அடிப்பதுதானே உங்கள் பிரச்சினை? You’re mistaken. நான் இந்த மாதிரி ஆயிரம் கதைகளை எல்லா பத்திரிகைகளிலும் படித்திருக்கிறேன் – குமுதம் சாதா, சாதா விகடன், குங்குமம், அந்த காலத்து சாவி, இதயம் போன்ற ஆண்களுக்கான பத்திரிகைகள் உட்பட. தரம் எந்த பாலினப் பத்திரிகையிலும் காணப்படாத விஷயம் (vijayc கூட இதைத்தான் சொல்கிறார்: ippa ellam kumudham anandha vikatan have lost their shine). ‘எப்போதும் அதன் பெயர் தென்றல் அல்ல…’ எந்தப் பத்திரிகையில் வந்திருந்தாலும் என் ரியாக்சன் மேற்கண்ட மாதிரிதான் இருக்கும். தவிரவும், பங்ச்சுவேஷன் என் வீக் பாயின்ட்.

 5. புள்ளி ராஜாக்களை போட்டு தள்ளி விட்டீர்கள்! really superb!

Comments are closed.