டிஜிட்டல் கிருமி

இது கூகிள் வருவதற்கு முன்பு, இந்தியாவில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முன்பு நான் எழுதிய கதை (சமுroy என்ற புனைபெயரில்). இது ஒரு இணைய இதழில் வெளியானது. சற்றே புதுப்பித்து இங்கே இடுகிறேன்.

* * *

டிஜிட்டல் கிருமி

காலேஜ் முடிந்து அவசர அவசரமாக பிரவுசிங் சென்டருக்குப் போய்ப் பார்த்தால் செமை கூட்டம். அந்த இடத்தில் 3 மணி வாக்கில்தான் கூட்டம் சேரும். நான் வெளியே நிற்க வேண்டியிருந்தது. எனக்கு முன்பே வந்திருந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பெரிசும் அந்தக் குறுகலான இடத்தில் வரிசையாக நின்று தம் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

பெரிசு செல் ஃபோனைக் கையிலெடுத்த சமயம் பார்த்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவள் செருப்பு மேல் நின்றுகொண்டிருந்தேன் போலிருக்கிறது. “எக்ஸ்க்யூஸ் மீ” என்றாள். “ஸாரி” என்று விலகினேன். அவள் செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினாள். “சரி, நீ எங்கே போய்விடப் போகிறாய்? உன்னை ஏதாவது சாட் ரூமில் பிடித்துவிடுகிறேன்” என்று நினைத்துக்கொண்டேன்.

இன்னும் இரண்டு பேர் வெளியே வந்தார்கள். இரண்டு டிக்கெட் உள்ளே போயிற்று. பெரிசு பொறுமையில்லாமல் கிளம்பிவிட்டது. சென்டரின் சொந்தக்காரர் எட்டிப் பார்த்து, “உள்ள வாங்க சார்” என்றார். உள்ளே இருந்த எட்டு கம்ப்யூட்டர்களில் ஆறு ஆண்கள், மூன்று பெண்கள் (இரண்டு பேர் கூட்டாக வந்திருந்தார்கள்). ஒருவர் தவிர எல்லாரும் சாட்டிங்தான்.

ஒன்று IRC , இல்லையென்றால் யாஹூ சாட் அல்லது யாஹூ மெசஞ்சரில் சாட். மெசஞ்சரில் சாட் செய்துகொண்டிருந்தவர்கள் ஒரே சமயத்தில் நான்கைந்து விண்டோக்களைத் திறந்து வைத்துக்கொண்டு கடலை போட்டுக்கொண்டிருந்தார்கள். ஜோடியாக வந்திருந்த பெண்களும் சாட் செய்துகொண்டிருந்தார்கள். அடிக்கடி ரகசியமான சிரிப்பு வேறு. அந்த இடம் கொஞ்சம் ஓவர் குளிர்ச்சியாகத்தான் இருந்தது.

கதவு திறந்து ஒரு தலை உள்ளே சுற்றும் முற்றும் பார்த்தது. கம்ப்யூட்டர் கம்பெனி ஒன்றில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை பார்க்கும் உலக மகா கேடி பாலாவின் தலை அது. “அண்ணா, வெளியே வாங்கண்னா! உள்ள என்ன பண்றீங்க?” என்றான். நியாயம்தான் என்று வெளியே போனேன்.

“உங்களுக்கு அந்த ஆறாவது மெஷின் பொண்ணுங்களோட சாட் ஐ.டி. தெரியுமா பாலா?” என்றேன். பாலா உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு சொன்னான். “தெரியாதுண்ணா, ஆனா கண்டுபிடிச்சிருவோம். டோன்ட் பாதர். ஈ-மெயில் ஐ.டி. கூட கண்டுபிடிச்சிருவோம்.” இது பந்தா இல்லை. பாலா செய்யக் கூடிய ஆள்தான்.

“மீட் மை ஃப்ரெண்ட் அமர்” என்று ஒரு பையனை அறிமுகப்படுத்தி வைத்தான் பாலா. “அமர், திஸ் இஸ் கோபால்.” அமர் என் கைவிரல்களின் நுனியைப் பிடித்துக் கைகுலுக்கினான். ஆளுக்கு ஒரு தம் பற்ற வைத்துக்கொண்டு பாதி புகைத்ததும் இரண்டு பெண்களும் வெளியே வந்தார்கள். நாங்கள் உள்ளே போனோம்.

அந்த இன்னொரு பெண் மட்டும் தொடர்ந்து ஐ.ஆர்.சி.யில் சாட் செய்துகொண்டிருந்தாள். நல்ல உயரம், சிவப்பு. வயசு மிஞ்சிப் போனால் 17 இருக்கலாம். அனேகமாக +2 அல்லது காலேஜ் முதலாம் ஆண்டு. என் ரேஞ்ச் 19 டு 23. அதனால் எனக்கு அவளிடம் ஆர்வம் ஏற்படவில்லை.

அமர் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் என் வேலையில் பிஸி ஆனேன். அமருக்குப் பக்கத்து மெஷினில் பாலா. இருவரும் என்னவோ கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். “நீ வெளிய வாடா சொல்றேன்” என்று அமர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது கேட்டது. இருவரும் எழுந்து போனார்கள். நான் ஐ.ஆர்.சி.யில் #India என்ற சாட் ரூமில் ஒவ்வொரு பெண்ணிடமும் பேச்சு கொடுத்தேன். எல்லாரும் பிஸி.

இதற்குள் பாலாவும் அமரும் திரும்பி வந்தார்கள். அதற்குப் பின் நடந்த கூத்து மாதிரி எங்கேயும் பார்க்க முடியாது. 12ஆவது படிக்கும் அமருக்கு அந்த பொம்மையிடம் பேசியே ஆக வேண்டும். ஆனால் கூச்சம். அதற்குத்தான் பையன் பாலாவைப் போட்டு அந்தப் பிறாண்டு பிறாண்டியிருக்கிறான்.

பாலாவுக்கு அந்தப் பெண்ணைத் தெரியும். ஆனால் அவள் மேல் ஒரு இதுவெல்லாம் கிடையாது. அமர் இதை ‘நோட்டீஸ்’ செய்திருக்கிறான் என்பதால் பாலாவின் உதவியைக் கேட்டான். பாலா அவளுடைய சாட் ஐ.டி.யைக் கொடுத்து அவள் எந்த ரூமில் இருக்கிறாள் என்ற தகவலையும் அவளிடமே கேட்டுச் சொன்னான்.

நேரில் பேச பயப்படுவது கூட சகஜம்தான். அமர் சாட்டில் பேசத் தெரியாமல் முழித்தான். என்னை ஒருவன் ப்ரைவேட் சாட்டில் போட்டு அறுத்துக்கொண்டிருக்க, நான் அதை கவனிக்காமல் அமர் என்ன பண்ணுகிறான் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

<Superman_India>hi
<CutiePie84>hi
<Superman_India>asl?

இந்திய சூப்பர்மேன் என்கிற அமர் அந்தப் பெண்ணின் வயது, பாலினம், நாடு ஆகிய விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தான். தான் அந்தப் பெண்ணைப் பார்த்தது கூட இல்லை என்று காட்டிக்கொள்கிறானாம்.

<CutiePie84> 16/f/Chennai (நான் நினைத்தது சரியாகப் போயிற்று)
<Superman_India> cool :)

அமருக்கு சுத்தமாகப் பேச வரவில்லை. பாலா இதைப் பார்த்து அமருக்கு ஒரு டயலாக்கை எடுத்து விட்டான். அமர் அதை அப்படியே காப்பி & paste செய்து தன் மண்டையில் உதித்த சிந்தனை மாதிரி க்யூட்டிக்கு அனுப்பினான். க்யூட்டியின் பதிலை பாலா எட்டிப் பார்த்து பதிலை அமருக்கு அனுப்பினான்.

<Lord_Bala>19/m/Chennai. I’m based in Besant nagar.U?
<Superman_India>19/m/Chennai. I’m based in Besant nagar.U?
<CutiePie84> i’m in mylapore. wht do u do?
<Lord_Bala>I’m doing my second year B.Sc., Comp science
<Superman_India>I’m doing my second year B.Sc., Comp science (ஈயடிச்சான் காப்பி)

சளைக்காமல் ஒரு மணி நேரம் இப்படி விளையாடிக்கொண்டிருந்தார்கள் இரண்டு பேரும். க்யூட்டி எழுந்து போனதும் ஐந்து நிமிடம் கழித்து அமர் பேயறைந்த மாதிரி முகபாவத்துடன் வெளியேறினான்.

“இன்னாங்கய்யா வெளாடுறீங்க? கட் அண்ட் பேஸ் கடலையா?” என்றேன் தம் அடிக்க வெளியே வந்த பாலாவைப் பார்த்து.

“அதெல்லாம் கண்டுக்காதீங்கண்ணா. ஏதோ நம்மளால முடிஞ்ச ஹெல்ப்பு. இந்தப் பையன் ஓவரா கூச்சப்படறான்” என்றான் பாலா.

“நடத்துங்க, நடத்துங்க. ஆனா பாத்துப் பண்ணுங்க” என்று எச்சரித்தேன். எனக்கு என்னவோ அந்தப் பையன் மேல் நல்ல அபிப்பிராயம் வரவில்லை. ரகசியமாக ஒரு பொறாமையோ?

பாலா சூப்பர்மேன்-க்யூட்டி விவகாரதைப் பற்றி தினமும் அப்டேட் கொடுத்தான். அமர் நல்ல வேளையாக அதற்குப் பிறகு க்யூட்டியுடன் தானே சாட் செய்தான். ‘ஆஹா, நாம் இத்தனை நாளும் ஒரே இடத்திலா அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம்?’ என்று க்யூட்டி ஆச்சரியப்படும் சந்தர்ப்பம் வந்தது. இவந்தான் க்யூட்டியை கவனித்துக்கொண்டிருந்தான். க்யூட்டிக்கு இவனைப் பார்த்ததாகவே ஞாபகமில்லை. இது அமருக்கு வசதியாகப் போனது.

இரண்டு பேரும் வெளியே நின்று சின்னக் குரலில் நிறைய நேரம் பேசினார்கள். முன்பை விட அதிக நேரம் சாட் செய்தார்கள் (!). அமர் க்யூட்டியின் பிறந்தநாள் அன்று அவளுக்கு காஸ்ட்லியான கரடி பொம்மை ஒன்று வாங்கிக் கொடுதான். வீட்டில் இருக்கும்போது ஃபோனில் பேசினார்கள். “This guy is crazy about her” என்றான் பாலா. அப்படித்தான் தெரிந்தது. அவளுக்கும் அப்படித்தானாம்.

பிறகு பாலாவுக்கும் எனக்கும் அவர்கள் கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. எங்களுக்கும் மெயின்டெயின் செய்ய சொந்தமாக ஃபிகர்கள் இருந்ததால் நாங்கள் மாற்றான் ஃபிகர்களை மறந்து போனோம். நடுவில் திடீரென்று சூப்பர்மேனும் க்யூட்டியும் காணாமல் போனார்கள். இரண்டு பேரும் எங்கேயாவது ஓடிப் போய்விட்டார்களா என்று பாலாவை விசாரித்தேன். “இல்ல, அது மேட்டரே வேற” என்றான் பாலா.

சூப்பர்மேன் தன்னை டிகாப்ரியோ என்று நினைத்துக்கொண்டு க்யூட்டியிடம் தகராறு பண்ணியிருக்கிறான். அவனுடன் பேசாதே, இவனிடம் சிரிக்காதே என்று டிமாண்ட் செய்திருக்கிறான். அது க்யூட்டிக்குப் பிடிக்கவில்லை. அதனால் சண்டை. சூப்பர்மேன் படு டேஞ்சரான ஆள் என்று அப்புறம்தான் தெரிந்தது.

க்யூட்டியின் ஈ-மெயில் பாஸ்வேர்டை எப்படியோ தெரிந்துகொண்டு அதிலிருந்து பலருக்கு அவள் பெயரில் ஆபாச மெயில்களை அனுப்பியிருக்கிறான் சூப்பர்மேன். அவளுடைய ஃபோன் நம்பரைக் கொடுத்திருக்கிறான். அவளுடைய பாஸ்வேர்டை மாற்றிவிட்டதால் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளுக்கு தினமும் ஆபாச ஃபோன்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அப்போதுதான் க்யூட்டியுடன் எனக்கு முதல் என்கவுன்டர் நடந்தது. க்யூட்டி இதைப் பற்றி பாலாவிடம் புகார் செய்தாள். பாலா அவளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் என் ஆலோசனையைக் கேட்டான். ஹாலிவுட் மிலிட்டரி படங்களில் வரும் ராணுவ அதிகாரிகள் மாதிரி சீரியஸ் மிடுக்குடன் பேச வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

“எனக்கு ஒரு வழிதான் தோணுது. முதல்ல உன் ஈ-மெயில் ஐ.டி.யை disable பண்ணுவோம். அப்புறம் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணுவோம்” என்றேன். இன்டர்நெட்டில் தகவல் தேடும் ஸர்ச் இன்ஜின் ஒன்றில் பாஸ்வேர்ட்களை முறியடிப்பது பற்றிய தகவல்களைத் தேடினேன். மற்றவர்களுடைய பாஸ்வேர்டை crack செய்யும் சேவையை ஒரு புண்ணியவான் இலவசமாக செய்துகொண்டிருப்பது தெரிந்தது.

நான் க்யூட்டியின் ஈ-மெயில் முகவரியை அனுப்பினேன். சாயந்திரத்திற்குள் பாஸ்வேர்ட் கிடைத்தது. உடனே முதலில் க்யூட்டியின் பெயரில் லாகின் செய்து பாஸ்வேர்டை மாற்றினேன். அவன் அவள் பெயரில் இன்னும் சில நாட்களுக்காவது மெயில் அனுப்பாமல் இருப்பான். அவன் பயன்படுத்திய ஈ-மெயில் சைட்டுக்கு ஒரு புகாரை அனுப்பினேன்.

க்யூட்டியிடம் சூப்பர்மேனின் ஃபோன் நம்பரை வாங்கி அவனுக்கு ஃபோன் செய்தேன். “அமர் திவாரி இருக்காரா?” ஒரு பெண் குரல், “ஒரு நிமிஷம் இருங்கோ” என்றது.

“ஹலோ” – இது சூப்பர்மேனின் குரல்.

“அமர் திவாரி?”

“யெஸ், ஸ்பீக்கிங்?”

“நாங்க சி.பி.ஐ. cybercrime cell-லேர்ந்து பேசறோம். நாங்க எதுக்கு ஃபோன் பண்றோம்னு புரியுதா?” என்றேன் ஆபீசர் தோரணையில். அந்த முனையிலிருந்து காத்து கூட வரவில்லை.

“உங்களைப் பத்தின ஒரு கம்ப்ளெயின்ட்டை நாங்க இன்வெஸ்டிகேட் பண்ணிட்டிருக்கோம். உங்கள் ஈ-மெயிலை டிஸேபிள் பண்ணிருக்கோம். வி மே ஹாவ் டு அரெஸ்ட் யூ” என்றேன்.

“We have a few hundred megs of cached data that exposes you” என்று எனக்கே புரியாத பாஷையில் மிரட்டினேன்.

“நான் ஒண்ணும் பண்ணலியே!” என்றான் அமர்.

“We’ve got evidence, dickhead. அவங்க பெரிசா ஆக்‍ஷன் எடுக்க வேணாம்னு கேட்டிருக்காங்க. ஆனா வி ஆர் வெரி சீரியஸ் அபவுட் திஸ். யூ ஆர் ப்ளேயிங் வித் ஃபயர்.”

கொஞ்ச நேர விசாரணைக்குப் பிறகு சூப்பர்மேன் கதிகலங்கிப் போய் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். அதை டேப்பில் பதிவு செய்து வைத்துக்கொண்டோம்.

க்யூட்டி அவனை மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஆனால் மீண்டும் அவனுடன் கடலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சொல்லிவிட்டாள். சூப்பர்மேன் அதற்குப் பிறகு அந்த ஏரியா பக்கம் தலைகாட்டவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று அவளும் நானும் டேப்பின் பிரதிகளை வைத்திருந்தோம். நான் ஒரு ஜாலிக்காக எப்போதாவது அதை வாக்மேனில் போட்டுக் கேட்பேன்.

நான், க்யூட்டி, பாலா மூன்று பேரும் இப்போது ரொம்ப க்ளோஸ். அதுவும் க்யூட்டிக்கு நான்தான் ஆஸ்தான அட்வைசர். நடுராத்திரி ஒரு மணிக்கெல்லாம் ஃபோன் பண்ணுவாள். இருந்தாலும் தன் அக்காவின் யாஹூ ஐ.டி.யைக் கொடுக்கும் அளவுக்கு என் மேல் அவளுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை.

4 thoughts on “டிஜிட்டல் கிருமி

  1. சிறுகதை வடிவம் சரியா வராத மாதிரி தோணிச்சு. எழுதுனத வீணாக்குவானேன்னு போட்டேன். :-)

  2. சரியாக நினைவில்லை. ஆனால் இதற்கு முன்பே சின்னதாக ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். :-)

Comments are closed.