நடமாடும் மர்மங்கள்

நான் வசிக்கும் திருவல்லிக்கேணியில் தினமும் அரை மணி நேரமாவது நடக்கும் பழக்கம் எனக்குண்டு. பெரும்பாலான நாட்களில், மனநலம் பாதிக்கப்பட்ட, வீடில்லாத இரண்டு பேராவது அந்த அரை மணி நேரத்தில் கண்ணில் படுவார்கள். அவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்திருக்கிறது என்றாலும் எனக்கு மூன்று பேரை மூன்று காரணங்களுக்காக நினைவிருக்கிறது.

ஒருவர் ஆறடி உயரத்தில் முக்கால் வழுக்கையோடு அழுக்கு வேட்டி-சட்டையும் தாடியுமாக சுறுசுறுப்பாக நடமாடும் நடுத்தர வயதுக்காரர். பீடி பிடிப்பார். தனக்குத் தானே பேசிக்கொள்ளாத டைப். பெரிய தெருவில் ஒரு அஞ்சல் நிலையம் இருந்த காலத்தில் இவர் தினமும் அங்கே போய் போஸ்ட் கார்டு வாங்குவார். அங்கே வைக்கப்பட்டிருந்த மர பெஞ்சில் உட்கார்ந்து யாருக்கோ கடிதம் எழுதுவார். அனேகமாகத் தபால் பெட்டியில் போட மாட்டார் என்று ஞாபகம். அந்த போஸ்ட் ஆபீஸை மூடிய பின் அவர் அதை எப்படி சமாளித்தார் என்று தெரியவில்லை.

இன்றும் இவர் எந்தக் கவலையும் பயமும் இல்லாமல் சகஜமாகத் திரிந்துகொண்டிருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் நள்ளிரவில் தூக்கம் வராமல் தம் அடிக்க வெளியில் சென்றபோது இவரை வழியில் பார்த்தேன். மூடியிருந்த ஒரு கடை வாசலில் படுத்திருந்தார். கடைக்குப் பக்கத்து வீட்டுக்காரர் எங்கிருந்தோ ஸ்கூட்டரில் வந்து கம்பீரமாக நிறுத்தினார். ஸ்டாண்டு போடும்போதே இவரைப் பார்த்து “‘டேய், எந்திரி எந்திரி” என்றார். இவர் எழுந்தார். ஆனால் “எந்திரி எந்திரி எந்திரி” என்று ஸ்கூட்டர்காரரை நக்கலடித்துவிட்டு, “பெரிய்ய்ய இவன்” என்று படு நிதானமாக கமென்ட் அடித்துவிட்டுக் கிளம்பினார். ஸ்கூட்டர்காரருக்குப் பேச்சே வரவில்லை.

போஸ்ட் கார்டு பிரியர் எப்போதும் கூலாக இருப்பதால் எனக்கு அவரிடம் ஏற்பட்டிருந்த மரியாதை அன்று கணிசமாக அதிகரித்தது. இவருக்கு மட்டும் மனநல பாதிப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் எவ்வளவு கூர்மையானவராக, மரியாதைக்குரியவராக இருந்திருப்பார் என்று இவரை குடும்பத்தினர், நண்பர்களுடன் கற்பனை செய்து பார்ப்பேன். இவரிடம் ஏதாவது பேச வேண்டும் போல் இருக்கும். ஆனால் இவர் எப்படி பதில் கொடுப்பார் என்று தெரியாததால் ரிஸ்க் எடுக்கவில்லை.

இன்னொருவருக்கு சுமார் 30 வயது இருக்கும். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது. கொஞ்சம் குள்ளமான உருவம், தெளிவான முகம், சின்ன தாடி. நானும் என் நண்பன் ஒருவனும் ஐஸ் ஹவுஸ் பேருந்து நிலையம் அருகில் ஒரு டீக்கடைக்கு முன் தம் அடித்துக்கொண்டிருந்தோம். அந்த இளைஞன் என் நண்பனைப் பார்த்து, “பாலாஜி, பாலாஜி, எனக்கொரு டீ வாங்கிக் குடு பாலாஜி” என்று பாதிக் கெஞ்சலாகக் கேட்டான். என் நண்பன் பெயர் நாராயணன். அவன் யாராக இருந்தாலும் வெடுக்கென்று பேசும் ரகம். “எம்பேரு பாலாஜி இல்லியே” என்றான் நாராயணன். டீ கேட்டவன் அசராமல், “சரி, மோகன். எனக்கொரு டீ வாங்கிக் குடு மோகன்” என்றான். எங்களால் ரொம்ப நேரத்திற்கு சிரிப்பை நிறுத்த முடியவில்லை. கூடுதல் டீயை நாங்கள் ஸ்பான்சர் செய்தோம். எனக்கு எப்போதும் இரண்டு பேர் ஞாபகமும் சேர்ந்துதான் வரும். அதற்குப் பிறகு அந்த இளைஞன் கண்ணில் படவில்லை.

மூன்றாவது ஆள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. இவரும் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் அலைந்துகொண்டிருந்தவர். முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட கோபம்-வெறுப்பு-கசப்புணர்வு காம்பினேஷனுடன் மிக மிக மெதுவாக அடியெடுத்து நடப்பார். நேராகத்தான் பார்ப்பார். நின்ற இடத்தில் சிறுநீர் கழிப்பார். அவர் அணிந்திருந்த ஆடை புடவை இல்லை என்றாலும் அது அவரை ஒழுங்காக மறைத்தது. திடீரென்று ஒரு நாள் புத்தம்புதிய நைட்டியில், ஆனால் அதே காம்பினேஷன் முக பாவத்துடன் நடந்து போய்க்கொண்டிருந்தார். அந்த காலத்தில் பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு டவலைப் போர்த்திக்கொண்டு தெருவிற்கு வரும் வழக்கம் இருக்கவில்லை. புத்தாடை அணிந்த உணர்வே இல்லாமல் வெறுப்போடு இயந்திரம் மாதிரி நடந்துகொண்டிருந்த வினோதத்தை என்னால் மறக்க முடியவில்லை.

இவர்கள் எல்லோருமே நம்மைப் போல் (மரியாதைப் பன்மை) வாழ்க்கையில் ஒரு கட்டம் வரை ‘இப்படியொரு நிலைமை நமக்கெல்லாம் வராது’ என்ற நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழ்க்கை நடத்தியவர்கள்தானே என்று எனக்குத் தோன்றும்.

8 thoughts on “நடமாடும் மர்மங்கள்

 1. //இவர்கள் எல்லோருமே நம்மைப் போல் (மரியாதைப் பன்மை) வாழ்க்கையில் ஒரு கட்டம் வரை ‘இப்படியொரு நிலைமை நமக்கெல்லாம் வராது’ என்ற நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழ்க்கை நடத்தியவர்கள்தானே என்று எனக்குத் தோன்றும்.

  //

  ஆண்டவா.. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!!
  முடிந்தால் இவர்களுடன் பேசிப்பாருங்கள்!! இதமாகப் பேச முடியும் அவர்களால்… ஆனால் அவர்களுடன் பேசும் போது அவர்கள் ‘மனநிலை பிறழ்ந்தவர்க்ள்’ என்ற முன் முடிவு தெரியாத மாதிரி பேசுங்கள்! யாருக்குத் தெரியும் உங்கள் பேச்சு அவர்களின் குறையைத் தீர்க்கலாம்.

  நான் இது போன்ற ஆட்களுடன் பேசியிருக்கிறேன் அன்போடு ஆதரவோடு. என்னிடம் மரியாதையாகவே அவர்களும் நடந்திருக்கிறார்கள்.

  அன்பு ஒன்று மட்டும் தான் அவர்களுக்குத் தேவையான ஒரே மருந்து..

  எனக்கும் இது போன்ற ஒருவரைத் தெரியும். எழுதுகிறேன்!!
  அன்புடன்
  சீமாச்சு

 2. இவ்வளவு நீண்ட பதிவைப் படித்ததற்கு நன்றி! அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் (பிறழ்ந்தவர்கள் என்பது அவர்களை இழிவுபடுத்தும் வார்த்தை!) என்று எனக்குத் தெளிவாகத் தெரியும். அதற்குரிய எல்லா லட்சணங்களும் அவர்களிடம் உண்டு. அவர்கள் என்னிடமோ மற்றவர்களிடமோ சிநேகமாக நடந்துகொள்ள அவர்களுக்கு வலுவான காரணம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்!

 3. இங்கே நம்ம ஊர்லேயும் ஒருத்தரை அடிக்கடி பார்ப்பேன். யாரையும் தொந்திரவு செய்ய மாட்டார். ஒரு
  ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவைக் காதுக்குப் பக்கத்தில் வச்சுக் கேட்டுக்கிட்டே இருப்பார். ஒவ்வொரு சமயம்
  ஒவ்வொரு ரேடியோ. அவருக்குப் பேரே ரேடியோக்காரர்னு நாங்க வச்சாச்சு. எங்கே எந்த விழா நடந்தாலும்
  அங்கெல்லாம் இருப்பார்.

 4. எல்லா ஊரிலும் இருந்தாக வேண்டும். ஏனென்றால் இவர்களாக மாறாதவர்கள் எல்லாம் இவர்களைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.

 5. நானும் திருவல்லிக்கேணிவாசிதான். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெண்மணியை நானும் கவனித்திருக்கிறேன். அவர் ஒரு உணவகத்தில் (hotel) வந்து உணவருத்துவதை பார்த்திருக்கிறேன். அவரால் யாருக்கும் பொதுவாக எந்த தொந்தரவும் கிடையாது. அவரை பார்த்தபோது நல்ல குடும்ப பெண்மணியாக இருந்து, பின்பு எல்லாரையும், எல்லாவற்றையும் ஏதோ விபத்தில் இழந்தவரோ என எனக்கு தோன்றும். பரிதாபப்படுவதை தவிர வேறெதையும் செய்ய இயலாமைக்கு வருத்துகிறேன்!

 6. நான் அந்த அம்மாளைப் பார்த்தது இற்றைக்குச் சற்றேறக் குறைய பதினைந்தாண்டுகளுக்கு முன்பு. அப்போதே அவர் ஆரோக்கியமாக இல்லை. இன்று அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் சொல்லும் நபர் புதியவராக இருக்க வேண்டும்.

 7. உங்கள் கடைசி வரி இந்த contextஇல் மட்டுமல்லாமல் இன்னும் விரிவாகவே பயன்படுத்தலாம். அப்படித்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  ஒரு constant othering-கோடு தான் நாம் (பொதுவாக வாழ்க்கை அவதானங்கள் செய்யும்போது மனிதகுலத்தையே இப்படி ஒரு நாம் போட்டு ஆட்டைக்கு சேர்த்துக்கொள்வது நல்ல உத்தி) அணுகுகிறோம். பிறரின் பிறழ்வுகளை, சறுக்கல்களை, வருந்தத்தகு சூழ்நிலைகளை எட்டி நின்று பார்த்துப் ‘புரிந்துகொண்டுவிட்டதாக’ ஒரு நினைப்பு. அவை எவையுமே தனக்கு நிகழாது (அதான் முன்பே புரிந்துகொண்டாகிவிட்டதே) என்ற அசட்டை.

  ஆனால் சட்டை செய்ய ஆரம்பித்தால் மட்டும் anticipate செய்துவிட முடியுமா? இல்லையென்றால் எட்டிநின்று பார்த்து என்னதான் புரிந்துகொண்டோம். புரிதலின் இறுக்கமான எல்லைகளை.

  கதாவடிவம் வேண்டின் சொடுக்குக

 8. எங்கேயோ ஒரு குற்ற உணர்வும் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

Comments are closed.