பக்கத்து சீட்

இந்தப் பதிவு “எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா, அல்லது அல்லாருக்குமா?” என்கிற வகையைச் சேர்ந்தது.

நான் முந்தி வேலை பார்த்த கம்பெனியின் காரியாலயம் என் வீட்டிலிருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் இருந்தது. ஜன்னல் வழியாகப் பார்க்க இது ஒன்றும் கொடைக்கானல் இல்லை. ஆகவே புத்தகம் படித்து ஒரு மணி நேரத்தை ஓட்டினேன்.

புத்தகம்தான் கையில் இருந்ததே ஒழிய புத்தி வெவ்வேறுபட்ட விஷயங்களில் இருந்தது.

சிகர மணிநேர நெரிசலில் அவனவன் பெட்டி, பைகளோடு நிற்கவே சிரமப்பட்டுக்கொண்டிருக்கையில் நாம் டெர்மினஸிலேயே சீட்டைப் பிடித்து சொகுசாக உட்கார்ந்திருக்கிறோமே என்ற குற்ற உணர்வு, அவ்வாறாக பாதிக்கப்பட்டவர்கள் ‘நான் மட்டும் நிக்கணும், நீ உக்காந்துட்டு புக்கு வேற படிப்பியா?’ என்ற கண்ணோட்டத்தில் ஒரு வித தார்மீக உரிமையோடு இடுப்பை என் தோள் மீது அழுத்துவதால் ஏற்படும் எரிச்சல், இப்படி.

பேருந்து கூட்டமாக இருந்தாலும் காலியாக இருந்தாலும் பக்கத்தில் உட்காருபவர்கள் எனது நூல் வாசிப்புக்கு ஒரே விதமாகத்தான் ரியாக்டு கொடுப்பார்கள். முக்கால்வாசிப் பேர் சன்னமாக விசிலடிப்பார்கள் அல்லது பாடுவார்கள். எப்போதாவது சிலர் கடும் வெறுப்போடு, “இன்னா புக்கு?” என்று கேட்பார்கள். எனக்கும் கடுப்பாகி பதில் சொல்லாமல் அட்டையை அரை நொடிக்கு மிகாமல் காட்டிவிட்டு மீண்டும் புத்தகத்தில் மூழ்கிவிடுவதாக நடிப்பேன். அந்த அரை நொடியில் அந்த ஆள் ஒரு ம-வையும் பார்த்திருக்க முடியாது.

நான் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகம்தான் படித்துக்கொண்டிருந்தேன். இவன் இங்கிலீஷ் படிக்கிறானே என்ற பொறாமை/ஆற்றாமை கூட மேற்கண்ட ஆசாமிகளுக்கு இருந்திருக்கலாம்.