த்ரிஷாவுக்கு வலைப்பதிவர்கள் கட்டிய கோபுரம்

இது இந்த வலைப்பதிவின் கடந்த 30 நாட்களுக்கான ஹிட் சார்ட். இதில் தெரியும் வடக்கத்திய பாணி கோபுரம் சாட்சாத் நம் வலைப்பதிவர்களே இங்கே வந்தருளி எழுப்பியது.

trishagopuram.gif
இந்த நுப்பது நாளில் என்னென்னத்தையோ எழுதியிருந்தாலும் தலைவி த்ரிஷாவின் பெயரைத் தலைப்பில் கொண்ட ஒரு பதிவுதான் பெரும் கவனிப்பைப் பெற்றது. அந்த 322 பேரில் பலர் திரும்ப வரவில்லை என்பதை மற்ற நாட்களுக்கான டிக்கிட்டிகளைப் பார்த்தால் தெரிகிறது. ஒரு வார காலத்தில் மூன்று சிறுகதைகளைப் போட்டால் யாருக்குத்தான் பீதி ஏற்படாது?

இன்னொரு பதிவை அவ்வளவு பேர் பார்க்கவில்லை என்றாலும் அதற்கு இன்னமும் வலைப்பதிவர் கருத்துகள் வெளி்ப்பட்டவாறு இருக்கின்றன.

ஆராய்ச்சி முடிவுகள்: தமிழ் வலைப்பதிவர்களுக்குத் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் வெள்ளித் திரையிலும் பத்திரிகைகளிலும் பார்த்தது போகவும் கவர்ச்சிசார் கேளிக்கை தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் கருத்து சொல்லிப் பொருட்படுத்துவது அதை விட ஆழமான மேட்டர்களை.

ஈயாளுடெ இலக்கிய விசாரம்

எனக்கு சில மலையாள புத்திஜீவி நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் பழகிய தோஷத்தாலும் பொதுவாக கேரளாவைப் பற்றிய அறிவுஜீவி இமேஜ் காரணத்தாலும் அந்த ஊரில் எல்லோரும் ஓ.வி. விஜயன் படித்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

நான் எந்த மலையாள டீக்கடைக்குப் போக ஆரம்பித்தாலும் மாஸ்டரை ஆழம் பார்த்து முடித்த பின் அவர் கேரளாவில் எந்த ஊர் என்று கேட்பேன். பிறகு ஓ.வி. விஜயன், முகுந்தன், பால் ஜக்கரியா, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் பற்றியெல்லாம் கேட்பேன்.

(நான் சாகித்ய அகாடமியின் தமிழ் மொழிபெயர்ப்பில் வந்த முகுந்தனின் “மய்யழிப் புழையுடெ தீரங்ஙளில்” தவிர வேறெதையும் படித்ததில்லை.)

மலையாள எழுத்தாளர்களில் படிக்கவே மிகக் கடினமானவர் என்று கருதப்படும் (கோணங்கி மாதிரி என்று நினைக்கிறேன்) ஆனந்த் என்பவரின் புத்தகங்களை ரிக்‍ஷாக்காரர்கள் கூடப் படிப்பதாக ஒரு முறை கோழிக்கோட்டு நண்பர் ஒருவர் சிரித்துக்கொண்டே சொன்னார். அந்த சிரிப்பு அவரது பெருமையை மறைக்கவில்லை.

எனக்கு ஸ்ட்ராங்காக, சர்க்கரை ஜாஸ்தி போட்டுத் தேனீர் வழங்கும் பல மாஸ்டர்கள் மேற்சொன்ன பிரபலங்களில் ஒருவரைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லை. ஒருவருக்காவது ஒரு பெயராவது தெரிந்திருந்தால் நான் ஆறுதல் அடைந்திருப்பேன். முகுந்தன், விஜயன் என்றால் “இவங்கிட்ட மாட்டிக்கிட்டமே” என்கிற ரீதியில்தான் பார்க்கிறார்கள். (எனக்கும் ஏதோ ஒரு காலத்தில் திருவனந்தபுரத்தில் பத்து நாள் தங்கியபோது ஜக்கரியாவையும் கடம்மனிட்ட ராமகிருஷ்ணனையும் பார்த்ததை சொல்லிக்கொள்ளாமல் இருக்க முடிவதில்லை, என்ன செய்ய?)

கோழிக்கோட்டுக்காரர் இப்போது பத்திரமாக கோழிக்கோட்டிலேயே இருக்கிறார். அவர் என்றைக்காவது சென்னைக்குத் திரும்பி வந்து யாங்கைல மாட்டினால் அவரை ஒரு டீக்கடை மாஸ்டருடன் மோத விட வேண்டும்.

மொழிப் பிரச்சினை

“காலணிகளை வெளியே விடவும்”, ” கவனிக்கவும்” என்றெல்லாம் எழுதுகிறார்களே, இதில் “உம்” எங்கிருந்து வந்தது?

ஒன்று, செய்யுங்கள், கவனியுங்கள், எழுதுங்கள் என்று நேரடியாக எழுத வேண்டும். அல்லது செய்க, கவனிக்க, எழுதுக என்று எழுத வேண்டும், கொஞ்சம் பழைய வாடை அடித்தால் பரவாயில்லை என்கிற பட்சத்தில். இரண்டுமில்லாமல் ‘உம்’ போட்டு எழுதுவதில் ஏதோ சீரியஸ் பிழை இருக்கிறது. வார்த்தையிலிருந்து தனியாகப் பிரித்தால் பொருள் வராத ‘உம்’ எதற்கு?

“ங்கள்” என்ற பின்னொட்டில் ஒரு pattern இருக்கிறது…

பாருங்கள் = பார் + உ + ங்கள்
செய்யுங்கள் = செய் + உ + ங்கள்
வாருங்கள் = வா + ர் + உ + ங்கள்
சிரியுங்கள் = சிரி + உ + ங்கள்

“உம்”-இல் மூல வினைச் சொல் பிரிக்க முடியாமல் புதைந்திருக்கிறது…

பார்க்கவும் = பார்க்க + உம்
செய்யவும் = செய்ய + உம்
வரவும் = வர + உம்
சிரிக்கவும் = சிரிக்க + உம்

உம்மைத் தொகையில் வரும் ‘உம்’மை ஏற்கலாம், எதிர்காலத்தைக் குறிக்கும் ‘உம்’மை (“சுடும்”) ஏற்கலாம். இந்த உம் என்னாத்துக்கு?

‘தெரிவியுங்கள்’ என்பதில் இல்லாத ஒரு பணிவு ‘தெரிவிக்கவும்’ என்பதில் இருப்பது போல் தோன்றலாம். தயவு செய்து என்ற சொற்றொடர் எதற்கு இருக்கிறதாம். ஷார்ட்டாக இருக்கிறது என்பதற்காக இல்லாததையும் பொல்லாததையும் எழுதலாமா?

‘உம்’மின் மூலத்தை யாராவது கண்டுபிடித்தால் நன்றாயிருக்கும். அது அனேகமாக அந்தக் காலத்துப் பாட்டிகள் எழுதிய கடுதாசிகளிலிருந்து வந்திருக்கும். இலக்கணப் புலிகள் தயைகூர்ந்தென் ஐயத்தைத் தெளிவித்து உதவவும் உதவுங்கள்!

யார் இந்த ப்ளூட்டோ?

அண்மையில் பதவியிறக்கம் செய்யப்பட்ட ப்ளூட்டோ கிரகத்தைப் பற்றி எனக்கு மட்டுமே தெரிந்த சில தகவல்களை இந்த வலைப்பதிவின் 50,000 வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ப்ளூட்டோ (புளூட்டோ) கிரகம் இரண்டாம் உலகப் போருக்கு முன் வெள்ளைக்கார விஞ்ஞானி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மின்சக்தி, தொலைபேசி, கணிப்பொறி ஆகியவற்றுக்குப் பின் மிக முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று என ப்ளூட்டோ கருதப்பட்டது. நாட் எனி மோர். ப்ளூட்டோவின் பரப்பளவு சுண்டைக்காயை மிக மிக அருகில் வைத்துப் பார்த்தால் தெரியும் பரப்பளவை விடச் சிறியது என்று வேறு சில வெள்ளைக்கார விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். அதன் விளைவே அதற்குக் கிட்டிய குள்ளப் பட்டம்.

pulootto.gif

பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவ ஞானி ப்ளூட்டோவின் பெயரே இக்கிரகத்திற்கு சூட்டப்பட்டது. அஞ்ஞானிக்கு இருந்தது போன்று ப்ளூட்டோ கிரகத்திற்கும் பல்வேறு வகையான வாயுக்களின் வெளியீட்டினால் ஏற்பட்ட வால் போன்ற தாடி இருந்தமையால் ப்ளூட்டோவிற்கு ப்ளூட்டோவின் பெயர் சூட்டப்பட்டது.

கிரேக்கத் தத்துவ ஞானிகளுக்கும் விண்வெளியியலுக்கும் உள்ள உறவு கொஞ்சம் போல் தொன்மையானது. ப்ளூட்டோவின் ஆசிரியரான அரிஸ் டட்டிலின் (Aris Tuttle) பெயர் சுவிப்ட் டட்டில் (Swift-Tuttle) எனும் தூமகேதுவிற்கு வைக்கப்பட்டது. அதற்குப் பின் அரிஸ் டட்டிலை வெறுமனே “கிரேக்கப் பெரியவர்” என்று அழைக்கின்றனர்.

ப்ளூட்டோ ஒரு குள்ளக் கிரகம் என்று கண்டுபிடித்த மைக் பிரவுன் என்ற விஞ்ஞானியை காவல் துறை விசாரணை செய்து வருகிறது.

18 மாதக் குழந்தையுடன் பேசக் கூடிய விஷயங்கள்

‘டி.வி.யை அணைத்துவிட்டு உங்கள் மகனுடன் நிறைய பேசுங்கள், அவன் பேச்சுத் திறன் நன்றாக வளரும்’ என்று வாரிசின் டாக்டர் சொல்லியிருக்கிறார். அதனால் அவன் மாடு சத்தம், ஆட்டோ சத்தம், கோவில் சத்தம் எல்லாம் படு உன்னிப்பாகக் கேட்கும்போதும் என் அர்த்தமுள்ள சத்தத்தை அவன் காதில் போடுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறேன்.

குழந்தைகளுடன் பேசுவது என்று முடிவெடுத்துவிட்டால் விஷயத்திற்குப் பஞ்சமே இல்லை. இன்னதுதான் பேச வேண்டும் என்றில்லை. நம் நெருங்கிய நண்பர்கள் கூட ஜீரணித்துக்கொள்ள முடியாத கருத்துக்களைக் குழந்தைகளிடம் சொல்லலாம். அவர்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை.

குழந்தைகளுடன் பேச லாஜிக் தேவையில்லை. சமூகம் நம் மீது சுமத்தும் மொழி சார்ந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கும் நிர்ப்பந்தம் குழந்தைகளுடன் பேசும்போது நமக்கில்லை. ஜூனியருடன் டாட்டா போகும்போது இலக்கணம், உச்சரிப்பு, கோர்வையான பேச்சு, இதற்கெல்லாம் கூட டாட்டாதான்.

பெரும்பாலும் ஆட்டோ சத்தத்திற்குக் கிடைக்கிற கவனிப்பு என் சத்தத்திற்குக் கிடைப்பதில்லை. இருப்பினும் டாக்டர் பேச்சு கருதிப் பையனுடன் பொதுவாக நான் பேசும் விடயங்கள் பின்வருமாறு:

“அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா பாத்தியா? அப்பாவ கண்டுக்காம போறா பாரு, திமிர் புடிச்சவ.”

“அந்த அங்க்கிள் தொப்பை பானை மாதிரி இருக்கு பாத்தியா? அங்க்கிள், அங்க்கிள், நீங்க ஆனை மாமாவா பானை மாமாவான்னு கேக்கறியா?”

“பாரு, பைத்தியக்காரக் கோயில்ல மைக் போட்டு கத்தறாங்க. சரியான லூசு கோயில், இல்ல? [வெளியே வரும் முதிய பக்திமான் ஒருவரைக் காட்டி] இந்தப் பையன் எந்த ஸ்கூல் தெரியுமா?”